மகாதானபுரம் பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு
- வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி நடந்தது.
- வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி நடந்தது.
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் மாலையில் வெற்றிவேலனுக்கு அலங்காரமும் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதலும் நடந்தது.
பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரை செல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர் சமய உரை நிகழ்ச்சி நடந்தது. கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். தாணுமூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் 'கந்தன் கருணை' என்ற தலைப்பில் பேசினர்.
விழாவில் நேற்று முன்தினம் மாலையில் வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜையும், இரவு மெல்லிசை கச்சேரியும் நடந்தது.
3-வது நாளான நேற்று தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருள மேளதாளங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலமானது பழத்தோட்டம் பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடிகம்பம் அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தலத்தை வந்தடைந்தது.
அங்கு நாஞ்சில் நாடு புத்தனார் ஆற்றில் முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி, சமய கருத்தரங்கம் போன்றவை நடந்தது.
கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் 'வள்ளி தெய்வானை திருமணம்' என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் 'கந்தபுராணம் ஆராட்டு' என்ற தலைப்பிலும் பேசினர். பின்னர் இரவு சமபந்தி விருந்து நடந்தது.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தொழில் அதிபர்கள் மகேஷ், மணிகண்டன், மணிவண்ணன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வகுமார், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கிருஷ்ண விலாஸ் பொன்னுசாமி, பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகர் வேல்முருகன், நாடான்குளம் ராமன்புதூர் குமாரசுவாமி மற்றும் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாள் அதே இடத்தில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.