முதுகு தசைகளை பலப்படுத்தும் அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம்
- மூட்டுகளைப் பலப்படுத்துகிறது
- நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி', 'நமஸ்கார்' என்றால் 'வணக்கம்', 'பார்சுவ' என்றால் 'பக்கவாட்டு', 'கோணா' என்றால் 'கோணம்' என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது பாதி பார்சுவ கோணாசனம். இது ஆங்கிலத்தில் Half Prayer Twist Pose என்று அழைக்கப்படுகிறது.
பலன்கள்
நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. முதுகுத்தண்டை நீட்சியடைய வைக்கவும் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.
இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மூட்டுகளைப் பலப்படுத்துகிறது
செய்முறை
தவழும் நிலைக்குச் செல்லவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.
வலது காலை முன்னே கொண்டு வந்து இரண்டு கைகளுக்கு இடையில் வைக்கவும். வலது பாதம் வலது முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.
இடது கையின் முட்டியை வலது முட்டிக்கு வெளிப்புறமாகக் கொண்டு வரவும். இடது கை விரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முதுகை நன்றாக வலப்புறம் திருப்பவும்.
வலது கையைத் தரையிலிருந்து உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். வலது கை முட்டி மேல் நோக்கி இருக்க வேண்டும்.
தலையை நேராக அல்லது மேல் நோக்கி வைக்கவும்.
20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், தவழும் நிலைக்கு வந்து கால்களை மாற்றிச் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 அல்லது 5 முறை செய்யவும்.
முதுகுத்தண்டு, இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைப் பயில்வதைத் தவிர்க்க வேண்டும்.
கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்தைத் திருப்பி மேலே பார்க்காமல் நேராக அல்லது தலையைக் குனிந்து இந்த ஆசனத்தைப் பயிலலாம்.