உடற்பயிற்சி

தொப்பையை கரைக்க உதவும் சுப்த கோணாசனம்

Published On 2023-04-23 05:19 GMT   |   Update On 2023-04-23 05:19 GMT
  • வயிற்று உள்ளுறுப்புகளைப் பலப்படுத்துகிறது
  • வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.

இவ்வாசனத்தை ஹலாசனம் செய்த பின் பழகலாம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது.

பலன்கள்

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் பலப்படுத்தவும் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

இளமையான தோற்றத்தைத் தருகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. வயிற்று உள்ளுறுப்புகளைப் பலப்படுத்துகிறது. சீரண மண்டல செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. தொப்பையைக் கரைக்கிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்பு மற்றும் தொடையில் உள்ள அதிக சதையைக் கரைக்கிறது. குழந்தையின்மை குறைப்பாட்டை நீக்குகிறது.

கால்களை பலப்படுத்துகிறது. மாதவிடாய் காலத்து வலிகளைப் போக்க உதவுகிறது.

செய்முறை

விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும். கைகள் உடலின் பக்கவாட்டில் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு ஹலாசன நிலைக்கு வரவும்.

தலைக்குப் பின்னால் கைகளைக் கொண்டு சென்று பாதங்களைப் பிடிக்கவும். மாறாக, கால் பெருவிரலையும் பிடிக்கலாம்.

கால்களைப் பக்கவாட்டில் கொண்டு செல்லவும். 20 முதல் 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். ஆசன நிலையிலிருந்து வெளியில் வர, கால்களை விடுவித்து, ஹலாசன நிலைக்கு வரவும். பின் கால்களை உயர்த்தி முன்னால் கொண்டு வந்து தரையில் நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.

கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் சுப்த கோணாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

Tags:    

Similar News