சூரிய ஒளி அலர்ஜி... இப்படி கூட சரும ஒவ்வாமை வருமா?
- சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
- சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
வெயிலில் அதாவது இயற்கை வெளிச்சத்தில் பல உருவத் தோற்றமுடைய பல வடிவமுள்ள தோல் வெடிப்புகளும் சிகப்பு நிற தடிப்புகளும் உடலில் சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. மேலே சொன்னது போல தோலில் வேனற்கட்டி போன்ற சிறிய சிறிய சிகப்பு புள்ளிகள் சில பேருக்கு உடல் முழுவதும் ஏற்படுவதுண்டு.
சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் தோலில் படுவதாலும் அல்லது வேறு சில செயற்கை ஒளிக்கதிர்கள் தோலில் படுவதாலும் ஏற்படுவதுண்டு. இதனால் நமது உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டு அது இந்த சிகப்பு நிற தடிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.
மொத்தத்தில் வெயில் அதாவது சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். இது உங்களுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் இதைத் தெரிந்தவர்கள் மருந்தைத் தேடிக் கொள்வார்கள். தெரியாதவர்கள் குணமாகும்வரை பல மருந்துகளைத் தேடி ஓடிக்கொண்டிருப்பார்கள்.
பரம்பரையாகக் கூட சிலருக்கு சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. சில மருந்துகள், ரசாயனப் பொருட்கள், சரும வியாதிகள், கிருமி நாசினிகள், வாசனைத் திரவியங்கள் முதலியனவைகளை உபயோகிப்பவர்களுக்குக்கூட சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. இவைகளில் எதனால் உங்களுக்கு வருகிறது என்பதை நீங்கள் உபயோகிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்திப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.
சூரிய ஒளி அலர்ஜி சிலருக்கு லேசாக வந்து எந்தவித சிகிச்சையும் தேவைப்படாமல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சூரிய ஒளி அலர்ஜி இருப்பவர்கள் உடலை முடிந்தவரை மூடி மறைக்குமாறு ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் போவதற்கு சுமார் 20 நிமிடங்கள் முன்பே புறஊதாக் கதிர் தடுப்பு கிரீம்களை தடவிக் கொள்ள வேண்டும்.
இயற்கையாகவே நமது உடல் சூரிய ஒளியை நல்ல வகையில் மிக அதிகமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலுக்கு வைட்டமின் 'டி' சத்து போதுமான அளவு கிடைக்க சூரிய ஒளி மிகவும் உபயோகமாக இருக்கிறது.
இதன் மூலம் நமது உடல் எலும்புகள் அனைத்தும் உறுதியாகிறது. உடலுக்கு புதுத்தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.