டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
- நேற்று 1 டாலரின் மதிப்பு ₹85.18 ஆக இருந்தது
- அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12 ஆக சரிந்தது. தொடர்ந்து நேற்று [செய்வ்வாய்கிழமை] 1 டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று [புதன்கிழமை] மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. தொடர்ச்சியாக 6வது முறையாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்து வருகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அதிகரிப்பு மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
மேலும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்தது மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் நிலையான ரூபாய் மதிப்பு சரிவு தொடரலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.