ஓசூரில் யானை தந்தங்கள் கடத்திய 7 பேர் கைது
- 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
- 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடததினார்கள். அதில் 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே அனுமந்தபுரம் பக்கமுள்ள திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (27), கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சம்மந்தூர் பக்க முள்ள மாரநாயக்கன அள்ளியை சேர்ந்த விஜயகுமார் (25), ஊத்தங்கரை தாலுகா நடுப்பட்டி அருகே உள்ள ஒந்தியம்புதூரை சேர்ந்த ஹரிபூபதி (39), ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த பரந்தாமன் (27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டரும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூரை சேர்ந்த முனிராஜ் (29), பெட்டமுகிலாளம் அருகே உள்ள தொளுவபெட்டா பழையூரை சேர்ந்த லிங்கப்பா (39), பசலிங்கப்பா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய பெட்டமுகிலாளம கிராமம் போப்பனூரை சேர்ந்த பசப்பா (40), ஜெயபுரத்தை சேரந்த மத்தூரிகா (39) ஆகிய 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.