விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினக்கூட்டம்- மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த தேமுதிக
- எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்.
- கேப்டன் எங்கள் அனைவருக்கும் குரு.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில்,
வருகிற 28-ந்தேதி எங்கள் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளோம்.
இந்த நிகழ்வுக்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம்.
எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்.
நினைவு தினம் அன்று காலை 8.30 மணிக்கு தேமுதிக அனைத்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மவுன ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
போலீசார் அனுமதி கிடைத்தவுடன் 1 கி.மீ. மவுன ஊர்வலமாக நடந்து தலைமைக்கழகம் சென்று கேப்டன் ஆலயத்திற்கு சென்று அடைவோம்.
நினைவு தினம் அன்று வரும் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். நலத்திட்ட உதவிகள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும்.
கேப்டன் எங்கள் அனைவருக்கும் குரு. மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் 'கேப்டன் முதலாம் ஆண்டு குரு பூஜை' என்று பெயர் வைக்கப்பட்டது.
கேப்டன் நினைவிடத்திற்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஒரு வருடமாக தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் பேர் வருகிறார்கள். பண்டிகை தினங்களில் 10 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். கோவில் போல் ஆகி விட்டது.
அதனால் தேமுதிக சார்பில் குரு பூஜையாக ஆண்டாண்டு செய்வோம் என்று அவர் கூறினார்.