காதலியுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
- அந்த பெண் தனது காதலனை கடுமையாக திட்டியும், தாக்கியுள்ளார்.
- வீட்டில் தனியாக இருந்தபோது சிவகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சிவகுமார் (வயது21). இவர் பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து சிவகுமார் தனது பெற்றோருக்கு தெரிவித்தனர்.
அவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிவக்குமார் தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து சென்றார். அந்த பெண் திருமணம் செய்யாமலேயே சிவக்குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அந்த பெண் தனது காதலனை கடுமையாக திட்டியும், தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சிவக்குமார் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார் காதலியுடன் ஏற்பட்ட தகராறால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.