திருவண்ணாமலையில் கிரிவலம்- ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
- வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர்.
- கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியையொட்டி நேற்று முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம், வேலூர் மார்க்கமாக செல்லும் ரெயில்களில் முண்டியடித்துக் கொண்டு பக்தர்கள் ஏறினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகள் பெண்கள் ரெயிலில் ஏற முடியாமல் அவதி அடைந்தனர்.
பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் திருவண்ணாமலை ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. கிரிவலத்தையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதிலும் கூட்டம் அலைமோதியது.
ஆட்டோக்களால் திருவண்ணாமலை நகரம் போக்குவரத்து நெரிசலால் திணறியது. பக்தர்கள் நடந்து செல்ல கூட வழியில்லாத அளவுக்கு அனைத்து சாலைகளையும் ஆட்டோ ஆக்கிரமித்து இருந்ததால் கிரிவல பக்தர்களும், நகர பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெளியூர்களில் இருந்து வரும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரம் வரை அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.
திருவண்ணாமலை நகருக்கு வரும் பக்தர்களின் கார்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தும் மையங்களில் நிறுத்தி, மாடவீதிகளில் ஆட்டோக்களை அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.