செங்கோட்டையன் வீட்டு முன்பு குவிந்த ஆதரவாளர்கள்...
- அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
கோபி:
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அக்கட்சி யில் பல்வேறு பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும்.
தற்போது கே.ஏ.செங் கோட்டையன் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய லாளராகவும் இருந்து வருகிறார்.
சமீப காலமாக கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வந்த நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 9-ந் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது கடும் சர்ச்சையானது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக கூறப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்து கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழாவில் எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள், பேனர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.
இந்த திட்டத்திற்கு முதல் முதலாக நிதியை ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். இதனால் தான் அந்த பாராட்டு விழாவில் நான் பங்கேற்கவில்லையே தவிர புறக்கணிக்கவில்லை. புறக்கணிக்கவில்லை என்று சொல்வதைவிட எனது உணர்வுகளை வெளிப்படுத்தினேன் என்றார்.
இந்நிலையில் நேற்று இரவு கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டில் திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது வீட்டில் நுழைவாயில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இது குறித்து விசாரித்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு செங்கோட்டையன் வீட்டுக்கு போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கே.ஏ.செங்கோட்டையன் திடீரென கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு அவர் அங்கேயே தங்கி விட்டார்.
இதுகுறித்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறும்போது, நேற்று இரவு செங்கோட்டையன் கோவை மாவட்டத்தில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். கோவையில் அவரது மகன் குடும்பத்துடன் வசித்து வருவதால் அவர் வீட்டில் தங்கி இருக்கலாம் என்றனர்.
மேலும் இன்று மாலை கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அவர் நிச்சயமாக பங்கேற்பார் என்றனர்.
இதனால் அரசியல் களத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட் டையன் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொது கூட்டத்தில் பங்கேற்பாரா? என உறுதியான தகவல் தெரிய வில்லை. அவ்வாறு அவர் பங்கேற்றால் என்ன பேசப் போகிறார்? என கட்சியினர் இடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியுள்ளது.
இன்று 2-வது நாளாக செங்கோட்டையன் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. செங்கோட்டையன் வீட்டுக்கு வருபவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக அவர் வீட்டுக்கு செல்கிறீர்கள்? போன்ற விவரங்களை சேகரித்து அதன் பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டி பாளையம், அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன் குவிந்தனர்.
முதலில் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் தற்போது வீட்டின் கேட் திறக்கப்பட்டு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டையன் இன்று மதியம் வீட்டுக்கு வருவதாக வந்த தகவலை அடுத்து ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு முன்பு திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.