தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மாணவரணி 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விடியா தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு உள்ளது.
விடியா தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை, அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்து உள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையிலும்; கழக மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணி மாநில துணை நிர்வாகிகளும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக மாணவர் அணியினரும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.