உள்ளூர் செய்திகள்

அயனாவரத்தில் வெளிநாட்டில் மருத்துவம் படித்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-11-15 09:50 GMT   |   Update On 2022-11-15 09:50 GMT
  • நவீன் குமார் திடீரென வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அம்பத்தூர்:

அயனாவரம், முனுசாமி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி ஜெயலட்சுமி. பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் நவீன் குமார்(வயது25). இவர் ஜார்ஜியா நாட்டில் மருத்துவ படிப்பை முடித்து உள்ளார்.

இந்த நிலையில் வெளி நாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய மருத்துவ ஆணையம் நடத்தும் தேர்வை நவீன் குமார் கடந்த ஆண்டு எழுதி இருந்தார். இதில் அவர் தோல்வி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து நவீன் குமார் மீண்டும் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு எழுத வீட்டில் இருந்தபடியே படித்து வந்தார். அவரது அண்ணன் தருண் குமார் மூளை வளர்ச்சி குன்றிய வராக இருந்ததால் அவரும் வீட்டிலேயே இருந்தார். இந்திய மருத்துவ ஆணைய தேர்வில் தோல்வி அடைந்ததால் நவீன்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று காலை ஜெயராஜ் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் பல்லாவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். வீட்டில் நவீன்குமாரும், அவரது அண்ணன் தருண்குமாரும் மட்டும் இருந்தனர்.

இந்திய மருத்துவ ஆணைய தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் திடீரென வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறியாமல் அவரது அண்ணன் தருண்குமார் வீட்டில் இருந்தார்.

இரவு 11 மணியளவில் பெற்றோர் வீட்டுக்கு வந்த பின்னர்தான் மகன் நவீன்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News