திசையன்விளையில் குளத்தில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
- வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி ரெத்னம். இவர்களுக்கு ஜெனிபர் (வயது 14) என்ற மகளும், சிவராஜ்(12) என்ற மகளும் உள்ளனர்.
ஜேக்கப் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரெத்னம் திசையன்விளையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சிவராஜ் சண்முகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெனிபரும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு ரெத்னம் வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் பள்ளி முடிந்து சிவராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் புத்தகப்பையை வைத்து விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
அவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
தொடர்ந்து திசையன்விளை போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள நந்தன் குளத்தில் சிவராஜின் சைக்கிளும், அதன்மீது அவரது சட்டையும் இருந்தது.
இதனால் அவர் குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் தேடிய நிலையில், நள்ளிரவில் சிவராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.