மெட்ரோ ரெயில் பணியால் வீட்டுக்குள் 'திடீர்' பள்ளம்
- மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உடனடியாக ரசாயன கசிவை அடைத்தனர்.
- ரசாயனத்தின் அழுத்தம் அதிகமாக இருந்ததாலேயே வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்துள்ளது.
சென்னை:
சென்னை தி.நகரில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தி.நகர் லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென்று மண்ணில் புதைந்தது. இதனால் வீட்டுக்குள் பள்ளம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அங்கு சென்றனர். பின்னர் கான்கிரீட் கலவையை கொட்டி அந்த வீட்டில் ஏற்பட்ட பள்ளத்தை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தற்போது மெட்ரோ ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தரைக்கு அடியில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அங்கு கட்டுமான பணிக்காக ரசாயன திரவம் விடப்பட்டது. அப்போது அந்த ரசாயனம் குறிப்பிட்ட அளவை தாண்டி சென்று கொண்டிருந்தது.
இதனால் அந்த பகுதியில் ரசாயன கசிவு ஏற்படுவதாக ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் ரசாயன கசிவு எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதன் அருகில் தி.நகர் லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள வீட்டில் இருந்து ரசாயனம் வெளியேறியது.
அந்த வீட்டில் வசித்தவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு போன் செய்து வரவழைத்தனர். அவர் வந்து வீட்டை திறந்து பார்த்த போது வீடு முழுவதும் ரசாயனம் நிரம்பி காணப்பட்டது
இதையடுத்து மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உடனடியாக ரசாயன கசிவை அடைத்தனர். ரசாயனம் நிரம்பி வழிந்ததால் வீட்டுக்குள் தரைப்பகுதி 2 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இதையடுத்து மெட்ரோ ரெயில் ஊழியர்கள் அந்த ரசாயனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி கான்கிரீட் கலவை மூலம் வீட்டின் தரைப்பகுதியை சீரமைத்தனர். ரசாயனத்தின் அழுத்தம் அதிகமாக இருந்ததாலேயே வீட்டின் தரைப்பகுதி மண்ணில் புதைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.