தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்- முழு விவரம்
- திராவிட மாடல் அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் எண்ணற்றவை.
- கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும்-அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து-இரவு பகலாக பாடுபட்டு-உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில்-வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி-அவரது தியாகத்தை இழிவு படுத்தியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி-மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்-அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றி இருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத-எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதை விட கேலிக்கூத்தானது.
"நான் முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்காது" என்று துணிச்சலாக சட்டமன்றத்தில் அறிவித்தார் நமது திராவிட மாடல் முதலமைச்சர். "டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட பா.ஜ.க. அரசும்" "அப்படி பறித்துக் கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க.வும்" கைகோத்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்சனையை மறைத்து கபட நாடகம் போடும் அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க. அரசுக்கும் இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
"வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவை" தந்தை பெரியார் முன்னின்று போராடிய வைக்கத்தில் கேரள முதல்-மந்திரியுடன் கொண்டாடி-தந்தை பெரியாருக்கு அங்கே "புதுப்பிக்கப்பட்ட நினைவகம், நூலகம், கம்பீரமான சிலை" என முப்பெரும் சாதனைச் சின்னங்களை வைக்கத்தில் நிறுவி-தமிழ்நாட்டின் சமூக நீதிச் சுடரை வைக்கத்திற்குக் கொண்டு சென்று-அங்கே மாபெரும் விழா எடுத்து தந்தை பெரியாரின் புகழ்பாடி-இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட நதி நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பி இருப்பதற்கும் முதலமைச்சருக்கு செயற்குழு தனது பாராட்டு தலைத் தெரிவித்துக் கொள்கிறது.
குமரி முனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலையினை 1.1.2000 அன்று உலகம் வியக்கும் வகையில் நிறுவித் திறந்து வைத்தார் கலைஞர்.
திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு, கால் நூற்றாண்டு காலமாக கம்பீரத்துடன் நிற்கிறது. அறிவு அற்றம் காக்கும் கருவி என்றுரைத்த அய்யன் வள்ளுவரின் சிலையின் வெள்ளிவிழாச் சிறப்பைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தும் வகையில் டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் எழிலுடனும் ஏற்றத்துடனும் கொண்டாடும் முதலமைச்சருக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்து, உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை 'பேரறிவுச் சிலை' யாக போற்றிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து, சமத்துவத்தை நிலை நாட்டுவோம்.
தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத பிற ஆதிக்க கலாசாரங்களை முறியடிக்கும் முறையிலும் தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர் பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும்.
திராவிட மாடல் அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் எண்ணற்றவை.
பன்முக வளர்ச்சிக்கு அடிகோலும் திட்டங்களை பட்டி தொட்டிகளுக்கு எல்லாம் கழக உடன்பிறப்புகள் எடுத்துச் சென்று-"அமைந்ததோர் திராவிட மாடல் நல்லாட்சி-அணிவகுக்கும் மக்கள் நலத் திட்டங்களே அதற்கு சாட்சி" என்று விளக்கிட வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில்-ஏன் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர் என்று கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
"இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்து-பறிமுதல் செய்த படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என்று முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை இச்செயற்குழுவும் வழிமொழிந்து-முதலமைச்சரின் ஆலோசனையை உரிய முறையில் மத்திய அரசு இலங்கை அரசிடம் தெரிவித்து-"இந்தியப் பிரதமர்-இலங்கை அதிபர்" ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக-தமிழ்நாடு மீனவர்களை, படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும்-தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.