உள்ளூர் செய்திகள்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2025-01-27 14:47 IST   |   Update On 2025-01-27 14:47:00 IST
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
  • சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 17-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம், அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 24-ந்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,

25-ந்தேதி இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான 26-ந்தேதி இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனியை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் சென்றது.

வடக்கு வாசல் முன்பு தேர் வந்ததும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் சுருள் வழங்கினர். தேரோட்ட விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இழுக்கப்பட்ட தேர் மாலையில் திருநிலையை அடைந்தது.

இன்று இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெறுகிறது.

விழாவில் அனைத்து சிறப்பு பணிவிடைகளையும் தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News