உள்ளூர் செய்திகள்

நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம்

Published On 2025-02-06 12:02 IST   |   Update On 2025-02-06 12:18:00 IST

கோவை:

நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து இன்று தான் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இதனால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்றிரவே கொண்டாட்டம் களை கட்ட தொடங்கி விட்டது.

கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதனையொட்டி அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். சில ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பொறித்த டிசர்ட் அணிந்தும் வந்திருந்தனர்.

படம் வெளியானதையொட்டி தியேட்டர் முன்பு, படத்தின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த அஜித்தின் படத்திற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அங்கு நின்றபடி நடனமும் ஆடினர்.

தியேட்டருக்கு வெளியே சாலையில் பட்டாசுகளையும் வெடித்தனர்.

அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கு ரசிகர்கள் இனிப்புகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் குவிந்த அஜித் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்றாக குவிந்து, மேளதாளங்கள் முழங்க, அஜித்தே. அஜித்தே.. அஜித்தே... என கரகோஷம் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அஜித் படத்தின் பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.

பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் விடாமுயற்சி படம் வெளியானதையொட்டி அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். பூக்களை வாங்கி வந்து, அஜித்தின் புகைப்படத்தின் மீதும் மலர்களை தூவி உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக கூடி நின்று நடனமாடினர்.

பின்னர் அனைவரும் தியேட்டருக்குள் சென்றனர். சரியாக 9 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்டது. 2 வருடங்களுக்கு பிறகு தங்கள் தலைவரை திரையில் பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள், திரையில் அஜித்தின் பெயர் வரும் காட்சியிலும், அஜித் வரும் காட்சியிலும் விசில் அடித்தும், அஜித் அஜித் என கத்தியும் தியேட்டரையே தெறிக்க விட்டனர்.

சில ரசிகர்கள் திரையின் முன்பு ஏறி நின்று துள்ளல் நடனமும் போட்டனர். படம் தொடங்கியதில் இருந்து, படம் முடியும் வரை தொடர்ந்து கரவொலி எழுப்பி கொண்டே இருந்தனர்.

இதேபோன்று துடியலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் விடாமுயற்சி படம் வெளியாகியது.

அங்கும் ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags:    

Similar News