சி.பி.சி.எல். விரிவாக்கப்பணி: இழப்பீட்டுத் தொகை கேட்டு கிராமமக்கள் இன்று போராட்டம்
- பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.
- இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். இயங்கி வருகிறது.
இந்த நிலையில், ஆலை தொடங்கும் போது சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், ஆலையின் விரிவாக்க பணிக்காக 618 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர், சாகுபடிதாரர்கள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பனங்குடி கிராம மக்கள் உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பனங்குடி சி.பி.சி.எல். குடியிருப்பு வளாகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ஆலை ஆந்திராவிற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆந்திராவிற்கு மாற்றக்கூடாது பனங்குடியிலேயே இயங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.