தஞ்சாவூர் பெரியகோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி வழிபாடு
- சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
- பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூருக்கு தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, தனது மகன் ராகுல்ரவியுடன் நேற்று வந்தாா்.
சுற்றுலா மாளிகையில் தங்கிய இருவரும் தஞ்சாவூா் அரண்மனைக்குச் சென்றனா். அங்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார்.
பின்னா் அரண்மனை வளாகத்திலுள்ள சந்திரமௌலீசுவரா் கோயிலுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா். இதையடுத்து, அருகிலுள்ள சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
மாலையில் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்றாா். அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
வராஹி அம்மன், மராட்டா விநாயகா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா்.
பின்னா், தாண்டவ மாடியின் மீது ஏறி பாா்வையிட்ட அவா், மகா நந்திகேசுவரரை வழிபட்டு, சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டாா்.
இதையடுத்து, காா் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.
இதற்கிடையே தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவியை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் (வயது 35) என்பதும் ஆர்வமிகுமியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர்தீனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.