உள்ளூர் செய்திகள்
பன்னுக்குள் மனித பல்: பேக்கரியின் தயாரிப்பு கூடத்துக்கு `சீல்- அதிகாரிகள் நடவடிக்கை

பன்னுக்குள் மனித பல்: பேக்கரியின் தயாரிப்பு கூடத்துக்கு `சீல்'- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2025-03-21 11:40 IST   |   Update On 2025-03-21 11:46:00 IST
  • உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்.
  • பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூா் காங்கயம் சாலையில் பேக்கரி கடை உள்ளது. இந்தக்கடையில் வாடிக்கையாளா் ஒருவா் கடந்த செவ்வாய் கிழமை குழந்தைக்கு பன் வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் மனித பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள தயாரிப்புக் கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலமாக புகாா் தெரிவித்தார்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆறுச்சாமி கடையின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக சீல்வைத்து மூடினர். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறைபாடுகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு நடத்தப்பட்டு பேக்கரி தயாரிப்பு கூடத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா். 

Tags:    

Similar News