சிதம்பரத்தில் கவர்னருக்கு கறுப்புக்கொடி காட்டிய இந்தியா கூட்டணியினர் கைது
- சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா.
- சுவாமி சகஜானந்தா திருவுருவச் சிலைக்கு கவர்னர் மலரஞ்சலி.
சிதம்பரம்:
சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினை விடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கவர்னர் சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சுவாமி சகஜானந்தா நினைவிடத்திற்கு கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அன்சர்ரி, காங்கிரஸ் கட்சி மக்கின், ஜெமினிராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சிதம்பரம் மேலவீதியில் கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.