டெல்லி திகார் சிறையில் பணியாற்றிய பெண் சப்-இன்ஸ்பெக்டர், மணிமுத்தாறு பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை- ஐகோர்ட் கிளை
- இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
- வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு 8-ல் சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 22 ஆண்டுகளாக டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.
மேலும் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டர் மீது விசாகா கமிட்டி விசாரணை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் எந்தவித காரணமும் இன்றி டெல்லி சிறப்பு பட்டாலியன் பிரிவிலிருந்து என்னை கடந்த 20-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை (பட்டாலியனுக்கு) இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனது இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். மேலும் என்னை பணிமாற்றம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லாமல் டெல்லியில் இருந்து திருநெல்வேலிக்கு பணிமாற்றம் செய்தது சட்டவிரோதம். எனவே எனது பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் தனது உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியாலும், பழிவாங்கும் நோக்கோடும் இதுபோன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கது அல்ல, விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு எதிரானது. இந்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது. எனவே இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பணியிட மாற்றம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தலைவர் டி.ஜி.பி. மற்றும் டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.