உள்ளூர் செய்திகள் (District)

தஞ்சாவூரில் குற்றசெயல்களை தடுக்க `உரக்கச்சொல்' என்ற புதிய செயலி அறிமுகம்

Published On 2024-10-03 05:33 GMT   |   Update On 2024-10-03 05:33 GMT

தஞ்சாவூர்:

பொதுமக்கள் எளிதாக புகார் செய்யும் விதமாக தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகம் உருவாக்கிய "உரக்கச்சொல் " என்ற செயலியின் சேவை தொடங்கப்பட்டது.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் இந்தச் செயலியை அறிமுகம் செய்த தஞ்சாவூர் சரகக் டி.ஐ.ஜி. ஜியாஉல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள உரக்கச் சொல் என்கிற செயலியைக் செல்போனில் பிளே ஸ்டோர் ஆப் வழியாக பதிவிறக்கம் செய்து, பயனாளரின் பெயர், கைப்பேசி எண்ணைப் பதிவிட்டால், ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) வரும். அதைப் பதிவிட்டால் செயலி இயங்கத் தொடங்கும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் பங்கேற்றால், அவற்றை விரைவாக தடுத்துவிடலாம் என்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தங்களது பகுதியில் அல்லது செல்லும் வழியில் நிகழும் போதைப் பொருள்கள் புழக்கம், சூதாட்டம், லாட்டரி விற்பனை, கள்ளச்சாராயம், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், பொது இடத்தில் மது அருந்துதல், மணல் திருட்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ரவுடிகளின் நடவடிக்கை, தகராறு போன்றவை குறித்து புகார் செய்யலாம்.

இதில், குற்றம் நிகழும் இடம், என்ன குற்றம், காவல் நிலையம் போன்றவற்றை குறிப்பிட்டால், அது தொடர்புடைய காவல் அலுவலர்களுக்குச் செல்லும். இதையடுத்து, உடனடியாக காவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.

மேலும், அதில் நடவடிக்கை விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல் துறை உயர் அலுவலர்கள் கண்காணிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பதிவு செய்யும் புகார்தாரர்கள் பெயர், கைப்பேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும். அதேசமயம் தவறான தகவலை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News