வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு: வியந்து பார்த்து செல்லும் பொதுமக்கள்
- மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து வழிபாடு செய்தனர்.
- மரத்தில் பால் வடிவதை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பெருங்குளம் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு மேல்புறத்தில் சிவகளைக்கும், பெருங்குளத்துக்கும் இடையே குளம் உள்ளது.
இந்த குளத்துக்கரை பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் இருந்து நேற்று மாலை பால் வடிந்துள்ளது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் அருகே உள்ள ஊர்மக்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த ஊர்மக்கள் அம்மன் விரும்பும் மரமான வேப்பமரத்தில் இருந்து பால் வருவதை பார்த்து அம்மன் தான் இதை உருவாக்கி உள்ளார் என்று அந்த மரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் தேய்த்து சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும் பால் வடிந்ததை பார்த்து அவர்கள் வழிபாடு செய்தனர்.
அதை பார்த்து அந்த வழியாகச் சென்ற இளம்பெண் தனது தாயுடன் ஆட்டோவில் வந்துள்ளார். இங்கு நின்ற கூட்டத்தை பார்த்து ஆர்வத்துடன் அந்த இடத்தில் இறங்கி சாமி கும்பிட்டு விட்டு சென்றார். அந்த நேரத்தில வேப்பமரத்தில் இருந்து நுரை பொங்கியபடி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வடிந்தது.
இந்த செய்தி அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காட்டுத் தீ போல் பரவவும் ஊர்மக்கள் மற்றும் அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் என அனைவரும் இறங்கி வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், வேப்பமரத்தில் இருந்து பால் வடிவது மிகவும் அபூர்வமாகும். இது தெய்வ சக்தியான மரம் என்று கூறுகிறார்கள்.