உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது

Published On 2025-02-04 11:06 IST   |   Update On 2025-02-04 11:06:00 IST
  • போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
  • மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் உள்ளது.

இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பலரும் சமூக வளைதளங்ககளில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரத்தில் இந்து முன்னணியினர் தலையிட்டு இன்று இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலை தளங்ககளில் தகவல் பரவியது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி பா.ஜ.க. மாவட்ட முன்னாள் பொது செயலாளர் கோவிந்த ராஜூவை போச்சம்பள்ளியை அடுத்த செல்லம்பட்டி அருகே மொரசிபட்டியில் அவரது வீட்டில் சிறை வைத்து நேற்று காலை 6 மணி முதல் நாகரசம்பட்டி போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அவருடன் 25-க்கும் மேற்ப்பட்ட பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரையும் கைது செய்யப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இதன்காரணமாக பர்கூர் டி.எஸ்.பி. முத்து கிருஷ்ணன் தலைமையில் போலீசார் மாவட்ட எல்லையான மஞ்சமேடு தென்பெண்ணை யாற்றின் போலீஸ் நிலையத்தில் வாகனங்கள் தீவீர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.


திண்டுக்கல்

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று அறப்போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததுடன் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அங்கு செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்திலும் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவசேனா, வி.எச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் திண்டுக்கல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடைபெறுவதை தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் பழனி கோவில் உள்பட முக்கிய கோவில் முன்பும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.


நாகர்கோவில்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், மலை முழுவதும் முருகனுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை போராட்டம் நடத்தபோவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மதுரை மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து இந்து அமைப்பினர் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் பஸ் நிலையங்களிலும் ரெயில் நிலையங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்று இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இரவு 10 மணி முதல் 2 மணி வரையிலும், இரவு 2 மணி முதல் 6 மணி வரையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


சந்தேகப்படும்படியாக யாராவது வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர். நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

குழித்துறை, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல் போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை வழியாக செல்லும் ரெயில்களில் யாராவது இந்த அமைப்பு நிர்வாகிகள் பயணம் செய்கிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அமைப்பு நிர்வாகிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜாவை வடசேரி போலீசார் கைது செய்தனர். துவரங்காட்டை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் கார்த்திக்கை ஆரல்வாய் மொழி போலீசார் கைது செய்தனர்.

இந்து முன்னணி கோட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஜெயராம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி ஆலோசகர் மிஷாசோமனை பிரம்ம புரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சிறை வைத்துள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News