அதிக முறை அரசு பஸ்சில் பயணம்: குலுக்கல் முறையில் திருப்பூர் ஆசிரியைக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
- திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி அதிகமுறை பயணமாகி வந்தார்.
- 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருப்பூர்:
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் அதிக முறை பயணம் செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து போக்குவரத்து கழகம் சார்பில் ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து இரவு புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் செல்லும் மார்த்தாண்டம் அரசு பஸ்சில், திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி (வயது 26) அதிகமுறை பயணம் செய்து வந்தார்.
சமீபத்தில் நடந்த பரிசு போட்டி குலுக்கலில் இவர் தேர்வானார். இதையடுத்து அவருக்கு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசை, திருப்பூர் மண்டல மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார், பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்திரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் உள்ளிட்ட கிளை மேலாளர்கள் வழங்கினர்.
பயணி கஸ்தூரி கூறுகையில், பாதுகாப்பான பயணம். பெண் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு உள்ளது. அரசு பஸ்களை நம்பி, இரவில் பயணிக்கலாம். 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.