சமூக ஆர்வலர் கொலை: ஊருக்கு உழைத்தால் இதுதான் கதியா?- ஜகபர் அலியின் மனைவி கதறல்
- ஜகபர் அலி சமூக சேவகராக மக்கள் முன்பு விசுவரூபம் எடுத்தார்.
- அதிகாரிகள் தவறை தடுக்க முன்வரவில்லை.
ஜகபர் அலியின் கொலை இதை தான் சமூகத்துக்கு சொல்கிறது. ஏனெனில் தவறுகள் நடப்பது கண்ணுக்கு தெரிந்தால் தட்டிக் கேட்கவும், சுட்டிக் காட்டவும் பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றுதான் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
அப்படி செய்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதற்கு ஏற்கனவே சில சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. அந்த வரிசையில் இப்போது ஜகபர் அலியும் கொல்லப்பட்டுள்ளார்.
ஜகபர் அலியின் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள வெங்களூர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி புதுக்கோட்டையில் இருக்கிறார். 2-வது மனைவி மரியம் காரைக்குடியில் இருக்கிறார்.
ஜகபர் அலி காரைக்குடிக்கு அடிக்கடி சென்று வருவார். ஜகபர் அலி கொலை வழக்கில் சிக்கி இருக்கும் ராசுவின் கல்குவாரியில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலாளராக பணியாற்றி இருக்கிறார்.
ராசுவும், தேடப்படும் ராமையாவும் ஜகபர் அலிக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த கல்குவாரியில் நடந்து வந்த தில்லாலங்கடி வேலைகளை ஜகபர் அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முறைகேடான நிறுவனத்தில் வேலை பார்ப்பது முறையல்ல என்று தான் வேலையை உதறிவிட்டு வெளியேறி இருக்கிறார்.
அதன் பிறகுதான் கல்குவாரியில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியிலும், சட்டப்படி அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் துணிந்து ஈடுபட்டுள்ளார்.
அவரது முதல் போராட்டம் மெய்ப்புரம், லட்சுமிபுரம் கிராம மக்களை பாதுகாத்த போராட்டம். அந்த கிராமங்களில் கல்குவாரிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதும் அதனால் மக்கள் படும் வேதனைகளையும் அறிந்து அந்த பகுதி மக்களை திரட்டி கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த குவாரிகளை மூட வைத்தார்.
இதனால் ஜகபர் அலி சமூக சேவகராக மக்கள் முன்பு விசுவரூபம் எடுத்தார். தான் வேலை பார்த்த இடத்தில் நடக்கும் தவறுகளை கண்கூடாக பார்த்ததால் ராசுவின் கல்குவாரி முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் 2023-ல் அனுமதி முடிவடைந்த பிறகும் குவாரி இயங்கி வந்ததால் சட்டப்படி அதை மூட நடவடிக்கை எடுத்து உள்ளார்.
70 ஆயிரம் லாரி அளவுக்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வேறொரு இடத்தில் மலை போல் குவித்து வைத்திருந்ததை ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.
அதிகாரிகள் தவறை தடுக்க முன்வரவில்லை. அதற்கு பதிலாக அவரது புகார் பற்றி கல்குவாரி உரிமையாளர்களுக்கு தகவலை கசிய விட்டு உள்ளார்கள்.
தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்ட ஜகபர் அலியிடம் அவர் இன்னும் ஒரு வாரம் பொறுத்து இருங்கள் என்று கூறி இருக்கிறார். அப்படி காலதாமதம் செய்தால் பதுக்கி வைத்திருக்கும் கனிம வளங்களை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை ஜகபர் அலி எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
அதிகாரிகளிடம் நியாயம் கிடைக்காது என்பதால் ஜனவரி 17-ந்தேதி மக்களை திரட்டி போராடுவேன் என்று எச்சரித்து இருக்கிறார்.
இதற்கிடையில் ஜகபர் அலி குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வர இருந்ததால் குவாரி உரிமையாளர்களுக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது. நேரடியாகவே ஜகபர் அலியின் வீட்டுக்கு சென்று மிரட்டி இருக்கிறார்கள்.
எங்களுக்கு எதிராக செயல்பட்டால் நடப்பதே வேறு... என்று மிரட்டி சென்றுள்ளார்கள்.
சொன்னபடியே ஜகபர் அலி போராட்டம் நடத்த இருந்த அதே ஜனவரி 17-ந் தேதியே அவரது உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் மிகவும் கோரமான முறையில்.
லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், 'அவர் மசூதியில் இருந்து திரும்பி வரும் வழியில் திட்டமிட்டபடி மினி லாரியை மோத செய்தேன். முதல் முறை மோதிய போது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் ஒருவேளை உயிர் பிழைத்து விடுவார் என நான் 2-வது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த சகதியில் கிடந்த ஜகபர் அலியின் உடலை பார்த்தும் போலீசுக்கு எந்தவிதமான சந்தேகமும் ஏற்பட வில்லையாம்.
சாலை விபத்து என்றே முதலில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜகபர் அலியின் மனைவி மரியம் புகார் கொடுத்த பிறகே கொலை வழக்காக மாற்றப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தது பற்றி ஜகபர் அலியின் மனைவி மரியம் புகார் செய்துள்ளார். அப்போதே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜகபர் அலி காப்பாற்றப்பட்டிருப்பார்.
ஜகபர் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை சம்பவம் அரங்கேறி இருக்காது.
ஊருக்காக போராடினால் இதுதான் கதியா? என்று கண்ணீர் மல்க கேட்கும் ஜகபர் அலியின் மனைவி மரியத்தின் கேள்விக்கு என்ன பதில்?