தி.மு.க.-காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: செல்வப்பெருந்தகை
- தமிழ்நாடு முழுவதுமே இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- அனைவரையும் முட்டாள் ஆக்குவது தான் பா.ஜ.க. அரசியல்.
கோவை:
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய உள்ளோம்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடுவது என்பது அந்தந்த கட்சிகளின் முடிவு. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாடு மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழ்நாடு முழுவதுமே இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணை பாதுகாக்க கூடிய தலைவர்களாக ராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உள்ளனர்.
எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு தி.மு.க.வினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை கிழக்கே போ என்று கூறினால், அவர் மேற்கே போவார். இப்படி தான் அவர் நடந்து கொள்வார். நடிகர் விஜயின் கட்சி கொள்கை, கோட்பாடு, சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துபோவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம். வேறு எதுவும் இல்லை.
ஐ.ஐ.டி இயக்குனராக உள்ள காமகோடி மாணவர்களுக்கு எதை சொல்லிக்கொடுக்க வேண்டுமோ, அதனை சொல்லிக் கொடுக்காமல் மூட நம்பிக்கையை சொல்லிக்கொடுக்கிறார்.
விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட காலத்தில் கோமியம் குடியுங்கள் என கூறுகின்றனர். அனைவரையும் முட்டாள் ஆக்குவது தான் பா.ஜ.க. அரசியல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.