தமிழ்நாடு

வெட்டிப்பேச்சு பேசுற மாதிரி வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் பேசலாமா? - மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-22 12:23 IST   |   Update On 2025-01-22 14:00:00 IST
  • கொடுத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை.
  • மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

சிவகங்கை:

சிவகங்கையில் இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்துக்கு வரும்போது எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுகிறது. வீரம் பிறந்த இந்த மண்ணில் முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி போன்ற வீரமிக்க தியாகிகள் வாழ்ந்த மண் சிவகங்கை மண்.

வீரமும், ஆற்றலும் மிக்க அமைச்சராக இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பெரியகருப்பன் செயல்படுகிறார். மாவட்டத்தை எல்லாவகையிலும் மேம்படுத்துவதில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நம்பி பொறுப்புகளை கொடுக்கலாம் என்ற பட்டியலில் பெரியகருப்பன் இடம் பெற்றுள்ளார். செயல்களில் வேகமும், நேர்த்தியும் கொண்டவர் அவர். இந்த விழாவை மாநாடு போல் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ள அவருக்கும் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. அரசு மிகப்பெரிய பங்கு உண்டு. தி.மு.க. அரசு அமையும் போதெல்லாம் சிவகங்கை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும். தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியில் மாவட்டத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரூ. 616 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மருத்துவமனை ரூ.14 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இளையான்குடியில் சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், கருவூலம், அரசு மருத்துவமனை விரிவாக்கம், இளையான்குடி புறவழிச்சாலை, சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பள்ளி கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை, சிவகங்கை நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி இப்படி எண்ணற்ற திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்து 3½ ஆண்டு காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.

ரூ.2452 கோடி மதிப்பில் ஊரக குடியிருப்புகள், ரூ.1753 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், மினி விளையாட்டு அரங்கம், ரூ.35 கோடி மதிப்பில் ஐ.டி. பார்க், ரூ.100 கோடி மதிப்பில் சட்டக்கல்லூரி, சிராவயல் கிராமத்தில் தியாகி ஜீவானந்தம் நினைவு மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை அரசின் மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு மற்றும் அதிதீவிர சிகிச்சைக்கான கட்டிடங்கள், சிவகங்கை பஸ் நிலையம் சீரமைப்புகள், மானாமதுரையில் ஐ.டி.ஐ. கல்லூரி, 248 குடியிருப்புகள், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், திருப்புவனம் வைகையாற்றில் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுவரை சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த 3½ ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் மக்களின் உரிமைத்தொகை மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 426 பேர் மாதந்தோறும் ரூ.1000 தொகையினை பெற்று வருகிறார்கள். அதனை வாங்கிய சகோதரிகள் தாய் வீட்டு சீதனமாக இந்த தொகையை அனுப்பி இருப்பதாக மகிழ்ச்சியடைகிறார்கள்.

இதேபோல் கல்லூரிக்கு செல்வதற்கும், சிறு சிறு செலவுகளை சமாளிப்பதற்கும் கஷ்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்தை ஒரு அப்பாவாக இருந்து தருகிறார் என கூறுகிறார்கள்.


மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 7,210 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 4,076 பேரும் பயனடைகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நான் மணிக்கணக்கில் துணை முதல்வராக இருந்தபோதும், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் கடன்னுதவி வழங்கியுள்ளேன். அந்த சுழல் நிதியை பெற்ற மகளிர் குழுவினர் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளனர். அந்த வகையில் ரூ.855 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பசியால் அவதிப்படக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் 37 ஆயிரம் மாணவர்கள் சுவையாகவும், வயிறாரவும் சாப்பிடுகிறார்கள்.

"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேரும், "மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்" மூலம் 1 லட்சத்து 34 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.

22 ஆயிரம் முதியோர்களுக்கு ஓய்வூதியம், 27 ஆயிரத்து 938 பேருக்கு வீட்டுமனை பட்டா, 23 ஆயிரத்து 553 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி, 29 ஆயிரத்து 909 பேருக்கு பயிர்க்கடன்கள், 8 லட்சம் உழவர்களுக்கு பல்வேறு உதவிகள், 3,822 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 65 கோவில்களுக்கு குடமுழுக்கு, கழனிவாசல் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பணி என்பது உள்பட சிவகங்கை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 265 பணிகளுக்கு ரூ.38கோடியே 55லட்சத்து 55ஆயிரத்து 426 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. அரசு துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளி விவரத்தோடு சொல்லி வருகிறேன்.

இதையெல்லாம் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது? வாய்க்கு வந்தபடி எல்லாம் பொத்தாம்பொதுவாக கூறி வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை என்று எரிச்சலோடு புலம்பி கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டிப்பேச்சு பேசுற மாதிரி வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் பேசலாமா? மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய கடமை எங்களுக்கு இருக்கிறது. இதற்கான புள்ளி விவரங்களை உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கொடுத்த வாக்குறுதிகள் 505. அதில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் நிறைவேற்ற வேண்டியது 116 வாக்குறுதிகள் தான்.

அரசின் 34 துறைகளுக்கும் 2,3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது தெரிந்தும், தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். பாவம் அவர் இன்னொரு கட்சி தலைவரின் அறிக்கையை அப்படியே வாங்கி வெளியிட்டு இருக்கிறார்.

2011, 2016 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. அரசின் சார்பில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள், அதனை வெளியிட்ட நாள், அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை எதிர்க்கட்சி தலைவர் புத்தகமாக வெளியிட தயாராக உள்ளாரா?

கடந்த 10 ஆண்டுகள் முழுவதுமாக ஆட்சி செய்த அ.தி.மு.க. தமிழகத்தை அதள பாதாளத்தில் தள்ளியுள்ளது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.

சென்னை-கன்னியாகுமரி கடலோர சாலை திட்டம் என்று கூறினார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்றினார்களா? மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறினார்கள். யாராவது வாங்கியுள்ளீர்களா? எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று கூறினார்கள். செய்தார்களா?

தென் தமிழகத்தில் ஏரோபார்க், 10 ஆடை அலங்கார பூங்காக்கள், 58 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியதா?

பொது இடங்களில் இலவச வை-பை என்று கூறினார்கள். அது எங்கேயாவது அமல்படுத்தப்பட்டு உள்ளதா? இப்படி வெற்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டை பாழாக்கினார்கள். தமிழக அரசையும் திவாலாக்கினார்கள்.

தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டமாக்கினார்கள். பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள். இப்படி பேசக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது. அப்போது எதையும் அவர்கள் வாங்கவில்லை. பதவி பெற மட்டும் டெல்லிக்கு சென்றார்கள்.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றிய அரசு தமிழக அரசு என்று பார்க்காமல் கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கி வருகிறார்கள். ஒன்றிய அரசின் தடைகளை மீறி நாம் தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியே செலவிடப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு, தமிழக அரசை எப்படி வஞ்சிக்கிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2 நாட்களுக்கு முன்பு விரிவாக பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அதை படிக்கவும் இல்லை. காதில் வாங்கிக்கொள்ளவும் இல்லை. சாதாரணமாக தமிழ்நாடு திவாலாகி விட்டதாக கூறி வருகிறார். தமிழ்நாடு திவாலாக வேண்டும் என்பது தான் அவரது விருப்பமா?

தமிழக அரசு வெட்டிச்செலவு செய்கிறது என்று கூறுகிறார். அவர் எதை வெட்டிச்செலவு என்கிறார். மகளிர் உதவித்தொகை, காலை உணவுத்திட்டம் போன்றவற்றை கொச்சைப்படுத்தி பேசுகிறாரா? மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வாறு செலவு செய்வது என்பது எங்களுக்கு தெரியும்.

எதிர்க்கட்சிகள் போடும் கணக்கு அனைத்தும் தப்பு கணக்கு தான். இன்றைக்கு சிவகங்கை மாவட்டத்தில் மக்களின் வரவேற்பை பார்க்கும் போது உதயசூரியன் மீண்டும் உதிக்கும் என உறுதிபட கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News