ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
- பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுக்காரன் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் சில ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணியை செய்வதில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. உடனே அந்த ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்ற செய்ய வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சரிவர பணி செய்யாத ஆசிரியர்களை தவிர 3 ஆசிரியர்களை மட்டும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் படிக்க யாரும் வரவில்லை. இதனால் பணியில் இருந்த ஆசிரி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்து திடீரென்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அதிகாரியிடம் பெற்றோர்கள், 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
மேலும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களையும் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்ந்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.