உள்ளூர் செய்திகள்

அரசின் இலவச முட்டைகள் விற்பனை: துறையூர் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்டு?

Published On 2024-09-20 07:16 GMT   |   Update On 2024-09-20 07:16 GMT
  • ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.
  • சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட், ஆப் பாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்தனர்.

அப்போது ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் சார்பில் விநியோகம் செய்யப்படும் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் ஒஒட்டல் உரிமையாளரான தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி (58) என்பவரிடமிருந்து பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளரான வசந்த குமாரியையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதை தொடர்ந்து வசந்தகுமாரி திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினம் துறையூர் கிளை சிறையிலும் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டலை ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் ஒட்டலை பராமரித்தது தெரியவந்தது.

இதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் வட்டாட்சியர் உதவியுடன் ஓட்டலை மூடி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசின் இலவச முட்டைகள் ஓட்டளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதனால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Tags:    

Similar News