திருப்பூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
- நகரின் தாழ்வான பகுதிகளான மெயின்ரோடு, கரூர் ரோடு, புதுவிநாயகர் கோவில் வீதி, ராஜாஜி வீதி,பழையகோட்டை ரோடு உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பெய்த மழை காரணமாக இரவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்றிரவு 11மணி முதல் இன்று அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக காங்கயத்தில் மழை கொட்டி தீர்த்தது. காங்கயம் பகுதியில் கடந்த வாரம் 9 செ.மீ., மழை பெய்தது. அதன்பிறகு கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூரல் மழை மட்டும் பெய்தது.
நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு சுமார் 11:15 மணி அளவில் சாரலாக பெய்ய துவங்கிய மழை சற்று நேரத்திலேயே வேகமெடுத்தது. இதையடுத்து சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
நகரின் தாழ்வான பகுதிகளான மெயின்ரோடு, கரூர் ரோடு, புதுவிநாயகர் கோவில் வீதி, ராஜாஜி வீதி,பழையகோட்டை ரோடு உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பெய்த மழை காரணமாக இரவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்பூர் வடக்கு -51, அவினாசி -6-.40, பல்லடம்-5, ஊத்துக்குளி-4, காங்கயம் -84, தாராபுரம்-36, மூலனூர் -10, குண்டடம்-2, திருமூர்த்திஅணை-1, உடுமலை-1.40, மடத்துக்குளம்-2, திருப்பூர் கலெக்டரேட்-46, வெள்ளகோவில் ஆர்.ஐ.அலுவலகம்-12.20, திருப்பூர் தெற்கு-36, திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலகம்-92.30. மாவட்டம் முழுவதும் மொத்தம் 443.30 மி.மீ., மழை பெய்துள்ளது.
90அடி உயரமுள்ள அமராவதி அணையில் 87.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் 1600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழையின் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் சகதிக்காடாக மாறியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.