திசை மாறி சென்ற பலூன்.. சர்வதேச பலூன் திருவிழாவில் பரபரப்பு..
- 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
- யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பொள்ளாச்சி:
சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக சுற்றுலாத்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. சென்னையில் கடந்த வாரம் பலூன் திருவிழா நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 10-வது ஆண்டாக நேற்று பலூன் திருவிழா தொடங்கியது.
3 நாட்கள் நடக்கும் இந்த பலூன் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பலூன்கள் பறந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 6-ம் எண் கொண்ட யானை வடிவிலான ராட்சத பலூன் வானில் பறக்கவிடப்பட்டது.
இந்த பலூனில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் பைலட்டுகள் இருந்தனர். அவர்களுடன் 2 பெண் குழந்தைகளும் பலூனில் பயணம் செய்தனர்.
ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த பலூனை தரையிறக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் திசைமாறி வானில் சுற்றி கொண்டிருந்தது.
பின்னர் திசை மாறிய பலூன் 30 கி.மீ தூரம் தாண்டி உள்ள கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பலூனில் இருந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இதற்கிடையே வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன், வயல் வெளியில் விழுந்த ராட்சத பலூனில் இருந்த ஆண், பெண் பைலட்டுகள், 2 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.