தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள்
- பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
- தொழிலாளர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வருகிற 20-ந்தேதிதான் திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. அதன்பிறகே பெரும்பாலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் திருப்பூரில் இன்று பிரதான சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் திரும்பிய பிறகே, திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.