தமிழ்நாடு

மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

Published On 2025-01-15 12:26 IST   |   Update On 2025-01-15 12:26:00 IST
  • அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
  • பாளை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நெல்லை:

பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டு பொங்கல் என்ற போதிலும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அந்நாளை காணும் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் காணும் பொங்கல் தினமான இன்று பாபநாசம், அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் கடுமையான சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுப்பப்பட்டன.

மக்கள் இப்பகுதிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கார், வேன்களில் வந்ததால் வனப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தாமிரபரணி ஆறு பகுதிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

களக்காடு தலையணை, வடக்கு பச்சையாறு அணைப்பகுதி, தேங்காய் உருளி அருவி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர். மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேநேரம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் காணும் பொங்கலையொட்டி அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். அங்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். வீட்டில் சமைத்த உணவை அறிவியல் மையத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாளை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாளை மார்க்கெட், மேலப்பாளையம், நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் காலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1000 வரைக்கும், பிராய்லர் கோழி கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News