தமிழ்நாடு

ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் அதிரடி கைது

Published On 2025-01-15 12:05 IST   |   Update On 2025-01-15 13:56:00 IST
  • ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
  • சீண்டல் எல்லை மீறி போனதால் மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று பொங்கல் பண்டிகையை யொட்டி அவர் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்கு உடன் படித்து வரும் நண்பருடன் டீ குடிப்பதற்காக சென்றார்.

அப்போது அங்கு வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது சீண்டல் எல்லை மீறி போனதால் அந்த மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் பேக்கரி கடைக்கு விரைந்து வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் ஸ்ரீராம் (29). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாணவியின் புகாரின் பேரில் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நேற்று மாலை 5.30 மணியளவில், ஒரு டீக்கடையில், சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியை பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை பிடித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் வளாகத்திற்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐ.ஐ.டி.யுடன் எந்த தொடர்பும் இல்லை.

சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாணவிகள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News