தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா தான்- அமைச்சர் பெரியசாமிக்கு ஓ.பி.எஸ். பதிலடி

Published On 2025-01-15 13:29 IST   |   Update On 2025-01-15 13:29:00 IST
  • 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம்.
  • முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது.

கூடலூர்:

முல்லை பெரியாறு அணையை உருவாக்கிய ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர் கேம்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இ.பெரியசாமி கூறியதாவது,

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசுதான். அதேபோல் 152 அடியாக உயர்த்த கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். இந்த வழக்கிலும் வெற்றி பெற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்றார்.

அதன் பிறகு பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் அ.தி.மு.க. தான் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அமைச்சர் இ.பெரியசாமி தி.மு.க. ஆட்சியில் தான் இது செயல்படுத்தப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளர். தமிழக மக்களுக்கு மிகவும் நன்றாக தெரிந்த விசயத்தை மறைத்து அமைச்சர் இ.பெரியசாமி இவ்வாறு பொய்யான தகவலை கூறுவது ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News