ராமேசுவரத்தில் இருதரப்பினர் மோதல் - வாலிபர் படுகொலை
- நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
- முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள கரையூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே சேரான் கோட்டை மற்றும் தெற்கு கரையூர் பகுதி உள்ளது. இரு வெவ்வேறு பிரிவினரை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
2 பகுதிகளை சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
அப்போது ஒரு பிரிவை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் நண்டு வலைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த நம்பு குமார், சேது, சூரியன், ஹரி பிரபாகரன், சூரிய பிரகாஷ் ஆகியோரை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த நம்பு குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்தில் காயம் அடைந்த சேது, சூரியன், சூரிய பிரகாஷ், ஹரி பிரபாகரன் ஆகியோர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஸ் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும் வாலிபரை கொலை செய்து நான்கு பேரை கத்தியால் குத்திய அதே பகுதியைச் சேர்ந்த 7 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையுண்ட நம்புகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனையிலும், துறையூர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமேசுவரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.