நீதி இல்லாத ஆட்சியில் சிலம்புக்கு ஏது மரியாதை? அமைச்சர் கீதா ஜீவனுக்கு நடிகை குஷ்பு பதிலடி
- பெண்களை பெண்களாக பார்க்க தயங்கும் அமைச்சரின் மனநிலை வெட்கக்கேடானது.
- அரசு நிலத்தை ஆட்டையை போட்டு பங்களா கட்டியிருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை:
பெண்களுக்கு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும், பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்ததும் மதுரையில் இன்று கண்ணகியை போல் சிலம்பு ஏந்தி போராடிய குஷ்பு எங்கே போனார்? என்று அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-
ஒரு பெண் அமைச்சராக இருந்தும் பெண்கள் பக்கம் நின்று அவர்களின் நியாயத்துக்காக குரல் கொடுக்காததும், அவர்கள் பாதுகாப்புக்கு பக்க பலமாக நிற்காததும் வருத்தம் அளிக்கிறது.
ஒரு பெண் பாதிக்கப்படும் போது இந்த ஆட்சி, அந்த ஆட்சி, இந்த கட்சி, அந்த கட்சி என்று பிரித்து பேசுவது ஏன்? பெண்களை பெண்களாக பார்க்க தயங்கும் அமைச்சரின் மனநிலை வெட்கக்கேடானது.
பாதிக்கப்பட்டிருப்பது பெண். முதலில் கட்சி, ஆட்சி என்ற வட்டத்துக்குள் இருந்து வெளியே வாருங்கள். பாலியல் குற்றச்சாட்டில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் கைதானாலும் அவரை பாதுகாக்க நாங்கள் முயற்சித்தோமா? ஆனால் அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்றதும் அவரை காப்பாற்ற போராடியது யார்? இன்னும் போராடி கொண்டிருப்பது யார்? அரசு நிலத்தை ஆட்டையை போட்டு பங்களா கட்டியிருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நாங்கள் கேட்பது ஒரே ஒரு கேள்வி தான். சம்பந்தப்பட்ட அந்த 'சார் யார்?' என்பதுதான். அதைகூட வெளியே சொல்ல தயங்குகிறார்கள்.
சிறப்பு விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றோம். அதைகூட ஏற்க தயங்குவது ஏன்?
சிலம்பு ஏந்தி கண்ணகியை போல் போராடியதாகவும், இப்போது சிலம்பு காணாமல் போய்விட்டதா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கண்ணகி நீதி கேட்டதும் அநீதி நடந்ததை அறிந்து பாண்டிய மன்னன் உயிரையே விட்டிருக்கிறான். ஆனால் இந்த ஆட்சியில் நீதியே இல்லையே. நடந்த அநீதிக்காக வருத்தப்படாதவர்களிடம் நீதி எப்படி கிடைக்கும்?
கண்ணகியாக வாழ போராட வேண்டிய ஆட்சியில் சிலம்பு காணாமல் போவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.