உள்ளூர் செய்திகள்

சென்னையில் டெங்கு பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணி தீவிரம்

Published On 2022-09-02 11:14 IST   |   Update On 2022-09-02 13:08:00 IST
  • மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு இருப்பதால் அதனை ஆரம்பத்திலேயே ஆய்வு செய்து ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
  • வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்ணீரில் கலப்பதற்கு குளோரின் பவுடர் வழங்கப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை உருவாக்கக் கூடிய ஏடீஸ் கொசு உற்பத்தியை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கக் கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் நீர்நிலைகளில் மட்டுமின்றி வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகும்.

இவ்வகை கொசுக்கள் மூலமே டெங்கு காய்ச்சல் பரவக்கூடும். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்க கழிவுநீர் கால்வாய், நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து நேரில் எந்திரங்கள் மூலமாக கொசு மருந்து அடிக்கப்படுகின்றன.

தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு இருப்பதால் அதனை ஆரம்பத்திலேயே ஆய்வு செய்து ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வீடுகளில் உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்ணீரில் கலப்பதற்கு குளோரின் பவுடர் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி சுகாதார நல அதிகாரி டாக்டர். ஜெகதீசன் கூறியதாவது:-

தற்போது மழை மெல்ல தொடங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும். அதனால் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டமாக கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள 3300 சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். லாரிகள், டிரோன்கள், வேன்கள், ஊழியர்கள் மூலமாக கொசு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

பொது மக்களும் ஒத்துழைப்பு தந்தால் டெங்குவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பழைய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குடம், பாத்திரங்களில் வைக்கப்படுகின்ற குடிநீரை மூடி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News