இந்தியா

பி.எம்.டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்த 10-ம் வகுப்பு மாணவர்கள்- பள்ளிக்குள் வேகமாக ஓட்டிச்சென்ற 2 பேர் கைது

Published On 2025-02-28 11:36 IST   |   Update On 2025-02-28 11:36:00 IST
  • பள்ளியில் கொன்னி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
  • காரில் நணபர்களாக இணைந்து செல்வதற்கும் மாணவர்கள் திட்டமிட்டு இருந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் கொன்னி பகுதியில் ஒரு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கொன்னி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல் வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்குள் விலை மதிக்கத்தக்க காரான, பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது.

புழுதியை கிளப்பியபடி ஹாரனை தொடர்ந்து அடித்தபடி பள்ளி வளாகத்திற்குள் அந்த கார் சுற்றியபடி இருந்தது. காரை ஓட்டியவர்கள், அதனை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக ஓட்டியபடி இருந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு அந்த கார் அங்கிருந்த வயல் வெளியை நோக்கி சென்றது. இதையடுத்து பள்ளியின் கேட்டை ஊழியர்கள் மூடினர். இதனால் பள்ளி வளாகத்தை விட்டு கார் வெளியே செல்ல முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பள்ளி வளாகத்துக்குள் வேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். காரை ஓட்டி வந்த பத்தினம் திட்டாவை சேர்ந்த ஜோஸ் அஜி(வயது19), காரில் அமர்ந்திருந்த ஜூவல் தாமஸ்(19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த காரை அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் பிரியாவிடை நிகழ்வு கொண்டாட்டத்துக்காக 2 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், அதனை கொடுப்பதற்காக அந்த காரை தாங்கள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் பிரியாவிடை நிகழ்வை கொண்டாடுவதற்காக பி.எம்.டபிள்யூ. காரை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர். அந்த காரில் குழு புகைப்படம் எடுக்கவும், காரில் நணபர்களாக இணைந்து செல்வதற்கும் மாணவர்கள் திட்டமிட்டு இருந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுதது பள்ளி வளாகத்திற்குள் ஆபத்தான முறையில் காரை ஓட்டியது, அனுமதியின்றி பள்ளிக்குள் அத்துமீறி நிழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் அந்த 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. அதனடிப்படையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டிவந்த பி.எம்.டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News