பாலியல் வன்கொடுமை குற்றவாளி... சாமியார் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமின் நீட்டிப்பு
- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
- 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.