இந்தியா

மணிப்பூரில் இணையச்சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2023-06-12 13:20 IST   |   Update On 2023-06-12 13:20:00 IST
  • இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
  • தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இைணயச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தடையில் கைபேசி இணையச் சேவை மற்றும் அகண்ட அலைவரிசை இணையச் சேவை உள்ளடங்கியதாகும். அரசு பயன்பாட்டுக்கான இணையச் சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News