கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்து 9 வியாபாரிகள் பலி
- விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தார்வார் பகுதியில் இருந்து ஒரு லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 25 வியாபாரிகள் அதில் பயணித்தனர். இந்த லாரி இன்று அதிகாலை யல்லாப்பூர் தாலுகா பகுதியில் உள்ள அர்பைல் காட் என்ற பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 9 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற வியாபாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். லாரியின் அடியில் சிக்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைக்க அலறினர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து யல்லாபூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் விபத்தில் பலியான 9 பேரின் உடல்களையும் போலீசார் போராடி மீட்டனர். பின்னர் படுகாயத்துடன் போராடிய 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான 9 வியாபாரிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் சக காய்கறி வியாபாரிகள் ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இறந்த 9 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
அதிகாலை நேரம் என்பதால் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்தில் சிக்கியதா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் விபத்து நடந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர். அதிகாலையில் நடந்த விபத்தில் 9 வியாபாரிகள் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.