நமது பண்டிகைகள் நாட்டின் ஒற்றுமையை காட்டுகின்றன- மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
- மாணவர்கள் புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் திறன்களை மெரு கூட்டவும் ஒரு நேரம் ஆகும்.
- மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 120-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
இன்று பல்வேறு மாநிலங்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சைத்ர நவராத்திரி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய புத்தாண்டும் இந்த நாளில் இருந்து தொடங்குகிறது. வரும் நாட்களில் ஈத் உள்பட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வரும் நாட்களில் கொண்டாடப்படவுள்ள பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையில் பரவியுள்ள ஒற்றுமையின் உணர்வை சுட்டிக்காட்டுகின்றன.
பள்ளிகளில் கோடை விடுமுறை சில வாரங்களில் வர உள்ளது. கோடை விடுமுறையின் நீண்ட நாட்கள், மாணவர்கள் புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் திறன்களை மெரு கூட்டவும் ஒரு நேரம் ஆகும்.
இன்று, குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய தளங்களுக்கு பஞ்சமில்லை. கோடை காலம் நெருங்கி வருவதால் ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும், 'மழையைப் பிடி' பிரசாரம் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல நகரங்களிலும் கிராமங்களிலும் தண்ணீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகக் கடத்துவதே இதன் நோக்கமாகும். மழைத்துளிகளைப் பாதுகாப்பதன் மூலம், நாம் நிறைய தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க முடியும்.
மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இது இந்தியாவிலிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு ஆகும்.
தற்போது, பழைய துணிகளை விரைவில் களைந்து விட்டு புதிய துணிகளை வாங்கும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது ஜவுளிக் கழிவுகளாக மாறி வருகிறது. உலகின் அதிகபட்ச ஜவுளி கழிவுகள் உருவாகும் 3-வது நாடு இந்தியா. இதனால் நாம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறோம்.
ஆனால் இந்த சவாலை சமாளிக்க நம் நாட்டில் பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியானாவில் உள்ள பானிபட் ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.
இதேபோல் தமிழ்நாட்டின் திருப்பூர், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
பிரதமர் மோடி தனது பேச்சின் போது தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.