புதிய வகை ஆங்கலர் மீனுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர்
- விஞ்ஞானிகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
- விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த வகை மீன் இதற்கு முன்பு எங்குேம கண்டுபிடிக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம:
கேரள மாநிலம் கொச்சியில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலியல் மையம் உள்ளது.
இங்குள்ள விஞ்ஞானிகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இவர்கள் அந்தமான், நிகோபார் தீவுகளில் உள்ள கடல் பகுதியில் சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது அவர்கள் புதிய வகை ஆங்கலர் மீன் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த மீனின் முதுகு பகுதி துடுப்பு போன்று காணப்பட்டது.
இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆங்கலர் மீன்களை விட இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அந்த மீன் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த வகை மீன் இதற்கு முன்பு எங்குேம கண்டுபிடிக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இந்த வகை மீன் தனது முதுகில் உள்ள துடுப்பு மூலம் இரையை தன் அருகே வரவழைத்து உண்ணும் குணம் கொண்டது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இந்த அரிய வகை ஆங்கலர் மீனுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை கொச்சி கடல்வாழ் உயிரின சூழலியல் மைய விஞ்ஞானி ராஜேஸ் குமார் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, இக்கடல் பகுதியில் நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்துள்ளோம். இப்போதுதான் இந்த வகை மீனை கண்டுபிடித்துள்ளோம்.
இந்த வகை மீன் உலகில் வேறு எங்கும் இல்லை. எனவே தான் இந்த மீனுக்கு நாங்கள் அப்துல் கலாம் பெயரை சூட்டினோம், என்றார்.