இந்தியா

பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்- மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன்

Published On 2024-01-08 06:20 GMT   |   Update On 2024-01-08 06:47 GMT
  • லட்சத் தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
  • 3 பேரை மாலத்தீ அரசு சஸ்பெண்டு செய்தது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ந்தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது.

தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் மோடி பகிர்ந்தார். லட்சத்தீவு என்பது அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயண பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டது, கடலுக்கு அடியில் நீந்தும் சாகசம் ஆகியவற்றின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதோடு இணைய தள தேடலில் லட்சத்தீவு கவனத்தை ஈர்த்தது. மாலத் தீவுக்கு போட்டியாக லட்சத் தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இதையடுத்து மாலத்தீவு மந்திரிகள் பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தனர்.


பிரதமர் மோடியை கோமாளி, பொம்மை என்று மாலத்தீவு மந்திரி மரியம் விமர்சித்து இருந்தார். மேலும் 2 மந்திரிகளும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தது.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியை இழிவாக விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகளான மால்ஷா ஷெரீப், மரியம் சியுனா, அப்துல்லா மசூம் மஜித் ஆகிய 3 பேரை மாலத்தீ அரசு சஸ்பெண்டு செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப்புக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

Tags:    

Similar News