இந்தியா

மது இல்லாமல் திருமணம் நடத்தினால் ரூ.21 ஆயிரம் பரிசு அறிவித்த கிராமம்

Published On 2025-01-08 07:30 IST   |   Update On 2025-01-08 07:30:00 IST
  • திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம்.
  • திருமணம் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதாலும், டி.ஜே. நிகழ்ச்சிகளாலும் அதிக அளவில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது.

ஒரு காலத்தில் மதுக்கடைக்கு செல்பவர்கள் ஒளிந்து, மறைந்து சென்று வந்தார்கள். ஆனால் இன்று மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு பெருமை கொள்ளும் நிலை வந்துவிட்டது.

திருமண நிகழ்ச்சி என்றாலும், துக்க நிகழ்ச்சி என்றாலும் மது இல்லாமல் இருப்பதில்லை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதுவும் திருமண வீடுகளில் மதுவிருந்து, டிஸ்க் ஜாக்கி எனப்படும் டி.ஜே. இசை நடன நிகழ்ச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்காக அதிக அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. பெரிய நகரங்களில் மட்டுமின்றி கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் வந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம ஊராட்சி மது விருந்து கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையில் எடுத்து, வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபற்றி ஊராட்சி தலைவரான சர்பாஞ்ச் அமர்ஜித் கவுர் கூறியதாவது:-

திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம். மது அருந்துவதைத் தடுக்கவும் இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம். திருமணம் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதாலும், டி.ஜே. நிகழ்ச்சிகளாலும் அதிக அளவில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. இதனால் பகை ஏற்படுவதுடன், அதிக ஒலி காரணமாக மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

எனவே திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்து இல்லாமல், டிஜே இசையை இசைக்காமல் இருந்தால் அந்த திருமண வீட்டாருக்கு ரூ.21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அறிவிப்பாகவும் வெளிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News