விளையாட்டு
ஐ.பி.எல். போட்டி முறையில் மாற்றம்: 10 அணிகள் இரு பிரிவாக பிரிப்பு- எதிரெதிர் குரூப்பில் சென்னை, மும்பை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன.
புதுடெல்லி:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதி மும்பையில் தொடங்கி மே 29-ந்தேதி நிறைவடைகிறது. வெவ்வேறு நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கும் விதமாக இந்த முறை மராட்டிய மாநிலத்திலேயே அனைத்து லீக் ஆட்டங்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை (பயோ பபுள்) பின்பற்றி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் இணைந்திருப்பதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதற்கு அடுத்து அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு போட்டித்தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டு ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. 4 முறை சாம்பியனான சென்னை அணி 2-வது இடத்தை பெற்று ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது.
ஏ பிரிவு
மும்பை இந்தியன்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பி பிரிவு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐதராபாத் சன்ரைசர்ஸ்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்
ஒவ்வொரு அணியும் முன்பு போலவே 14 லீக் ஆட்டங்களில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இதன்படி நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்பிரிவில் உள்ள மும்பை இந்தியன்சை 2 முறை எதிர்கொள்ள இருக்கிறது. இதே போல் பெங்களூரு அணியை எடுத்துக் கொண்டால் மற்றொரு பிரிவில் உள்ள ராஜஸ்தான் ராயல்சுடன் 2 முறை மல்லுகட்டும்.
மொத்தமுள்ள 70 லீக் ஆட்டங்களில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 20 ஆட்டங்களும், மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் 15 ஆட்டங்களும், மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் 20 ஆட்டங்களும், புனேயில் உள்ள எம்.சி.ஏ. சர்வதேச ஸ்டேடியத்தில் 15 ஆட்டங்களும் நடைபெறும். ‘பிளே-ஆப்’ சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கான இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...டி20 போட்டிகளில் அதிக ரன்கள் - ரோகித் சர்மா முதலிடம்