
வெற்றியோடு தொடங்குமா குஜராத் அணி?- பஞ்சாப்புடன் இன்று மோதல்
- இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று.
- இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.
2022-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே மகுடம் சூடிய குஜராத் அணி 2023-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது ஜோஸ் பட்லர், ரபடா, முகமது சிராஜ் வருகையால் அந்த அணி மேலும் வலுவடைந்துள்ளது. சமீபகாலமாக இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் ஜொலிக்காத ஜோஸ் பட்லர், ஐ.பி.எல். மூலம் இழந்த பார்மை மீட்கும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் பேட்டிங் தூண்களாக உள்ளனர். ரஷித்கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று. இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்றுத்தந்த ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26¾ கோடிக்கு எடுத்து அவரையே கேப்டனாக்கி இருக்கிறார்கள். அவரது வருகை பஞ்சாப் அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பேட்டிங்கில் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரும், பந்து வீச்சில் மார்கோ யான்சென், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹலும் வலு சேர்க்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் பஞ்சாப்பும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்னில் சுருண்ட குஜராத், சென்னைக்கு எதிராக 231 ரன்கள் திரட்டி ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சென்ற ஆண்டு இங்குநடந்த 8 ஆட்டங்களில் 6-ல் 2-வது பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித்கான், சாய் கிஷோர், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், நேஹல் வதேரா அல்லது பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.